குத்தாலத்தில் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்த பரத மகரிஷியின் மகளாக பார்வதி தேவி அவதாரம் செய்தாள். தக்க பருவம் வந்ததும் சிவபெருமானையே மணக்க வேண்டி கடும்தவம் புரிய, அவரும் காட்சியளித்து பார்வதியை மணந்துக் கொள்வதாக அருள்புரிந்து மறைந்தார். அதன்படி பார்வதியை சிவபெருமான் திருமணம் செய்துக் கொண்ட தலம் இந்தத் 'திருமணஞ்சேரி'.
மூலவர் 'அருள்வள்ளல்நாதர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் தரிசனம் தருகின்றார். உற்சவர் திருநாமம் கல்யாணசுந்தரேஸ்வரர். அம்பிகை 'யாழின் மென்மொழியம்மை' என்ற திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
இக்கோயிலில் அம்பிகையுடன் கல்யாணசுந்தரர் இருக்கும் காட்சி மிகவும் அற்புதமான வடிவம். அதனால் திருமணம் வரம் தரும் தலமாக வழிபடப்படுகிறது. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இங்கு வந்து அர்ச்சனை செய்து பிரார்த்திக்கின்றனர்.
மன்மதன் வழிபட்ட தலம். குலச்சிறை நாயனார் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகமும், திருநாவுக்கரசர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|